சென்னை:
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது, அவர் கீழ் பணியாற்றிய பெண் எஸ்பி பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை தெலுங்கானா மாநில காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வரும் பெண் எஸ்பி.க்கு, அந்தத்துறையைச் சேர்ந்தர ஐஜி முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 354, 509 மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பாக பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முருகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான உயர்நீதி மன்றத்தின் விசாரணையின்போது, 2 வாரத்தில் விசார ணையை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதி மன்றத்தின் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஐஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த உயர்நீதி மன்றம் கடந்த விசாரணையின்போது, இந்த வழக்கை டில்லி அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்ற விரும்புவதாக கூறியது. அப்போது பெண் எஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை கேரளாவுக்கு மாற்றும்படி கோரிக்கை விடுத்தார்.
ஆனால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற தமிழகஅரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. மேலும், விசாரணையை தமிழகத்தில் தான் நடத்த வேண்டும் எனக்கூறியது.
இந்த வழக்கில் இன்று உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை கூறியது. அதில், ஐஜி மீதான பாலியல் புகார் தெலுங்கானாவுக்கு மாற்றப்படுவதாகவும், தெலுங்கானா டிஜிபி இது தொடர்பாக பெண் காவலர் நியமித்து விசாரணை நடத்தி 6 மாநிலத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது.
மேலும், வழக்கை, வேறு மாநிலத்திற்கு மாற்றுவதால், தமிழக போலீசார் மீது நம்பிக்கையில்லை என்பது அர்த்தமாகாது என்று கூறிய நீதிபதி, வழக்கு ஆவணங்களை தமிழக தலைமை செயலர் உடனடியாக, தெலுங்கானா தலைமை செயலருக்கு அனுப்ப வேண்டும். அவர், டிஜிபிக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.