சென்னை: பழைய மகாபலிபுரம் சாலை அருகே கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் செமஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையில், நீர்நிலையில் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், நீர்நிலைகளில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் புதிய செமஞ்சேரி காவல் நிலையம் அடுத்த உத்தரவு வரும் வரை பயன்படுத்தப்படக்கூடாது என்றும், நீர்நிலைகளில் கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், காவல் நிலையத்தை இடிக்க உத்தரவிட நீதிமன்றம் தயங்காது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், இதுதொடர்பாக ஐ.ஐ.டி-மெட்ராஸ் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.