மதுரை:
துக்கடை திறப்பிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி, நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவற்றைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இப்படி மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய ‘சமூக விலகல்’ கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து இன்று 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது.

நீதிபதிகள் அஷோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பிஆர் கவாய் ஆகிய நீதிபதிகள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்கை விசாரித்தனர். அப்போது அவர்கள், “இந்த மனு குறித்து எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது. ஆனால் மாநில அரசுகள் மதுபானங்களை வீட்டிலேயே டெலிவரி செய்வது அல்லது மறைமுகமாக விற்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் சமூக விலகல் கடைபிடிக்கப்படும்,” என்று கூறினர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபக் சாய், “மிகவும் குறைந்த மதுபானக் கடைகளே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே சமூக விலகலைப் பின்பற்றுவது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது.

பொது மக்களின் வாழ்க்கை மதுபான விற்பனையால் பாதிக்கப்படக் கூடாது. இது குறித்து மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான பரிந்துரைகளை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்த அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, சமூக விலகலை பின்பற்ற மதுபானங்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் நேற்று திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பினால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.