சென்னை: திரையரங்களில் அதிக கட்டணம் வசூலித்தால்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளது.

ஓடிடியில் படங்களை பார்க்கும் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டதால், அதிக கட்டணம் வசூலிப்பதன் மூலம் தியேட்டர்கள் அதிக காலம் நீடிக்காது என்பதை சிந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் செயல்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 200-க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகிறது. குறிப்பாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், அதிக வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கும். மேலும், ஒரு திரைப்படம் வெளியாகிய ஒரு வாரத்திற்கு மட்டுமே மக்கள் கூட்டம் வருகிறது. அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் குறைவால், திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இதனால், கிடைத்த வரை லாபம் என புதிய படம் வெளியாகும் திரையரங்குகள், அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்பதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது

.இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது, முதல் நான்கு நாட்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை சரிபார்க்க அரசாங்கம் ஏற்கனவே குழுக்களை அமைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை திரையரங்கள் வசூலிப்பது பார்வையாளர்களை ஏமாற்றும் செயல் என்றும், இதுதொடர்பான புகார்கள் அளிக்கப்படும் போது, அரசு அமைத்துள்ள குழுக்கள் உடனடியாக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இன்றைய காலகட்டத்தில் திரையரங்கங்களில் படம் பார்க்கும் போது வாங்கி உண்ணும் பாப் கார்ன் கூட வீட்டிற்கே டெலிவரி செய்யும் நிலை இருப்பதையும், ஓடிடியில் திரைப்படங்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டதால் திரையரங்கங்கள் அதிக காலம் நீடிக்காது என்பதையும் திரையரங்கு உரிமையாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.