மதுரை
மதுரை நகரில் தீ விபத்து நடந்த பெண்கள் விடுதி கட்டிட இடிப்பு பணியை மதுரை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
மதுரையின்ன் மையப்பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது. பெரியார் பஸ் நிலையத்தின் அருகே கட்ராபாளையம் தெருப்பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று இருந்தது. இங்கு கீழ் பகுதியில் மருத்துவமனை, மருந்தகம், அடுத்தடுத்து கடைகள் உள்ளன. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் 20-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளன.
இந்த விடுதியில் மதுரை மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் தங்கி இருந்து வேலை செய்தும், கல்லூரிகளில் படித்தும் வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்த போது அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனா தீப்பிடித்து அங்கிருந்த பொருட்கள் மீது பரவி மிகவும் குறுகலான அறைகள் என்பதால், அடுத்தடுத்த அறைகளுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவியது.
அருகில் உள்ள திடீர்நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்து தீயில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆயினும் பரிமளா, சரண்யா ஆகிய 2 ஆசிரியைகள் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த 3 பேருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை நகரில் தீ விபத்து நடந்த 3 தளங்கள் கொண்ட கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடம் இடிக்கும் பணி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கட்டடம் நடைபெறுகிறது.