போபால்

ம.பி. சட்டமன்ற சபாநாயகர் தேர்வு போட்டியில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த சபாநாயகர் வேட்பாளர் 120 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் சபாநாயகராக பதவி ஏற்றார்.

300 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில், 114 இடங்களை  பிடித்த காங்கிரஸ் பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்துள்ளது.

15ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வீறுகொண்டு எழுந்து ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு (2018) டிசம்பர் 17ந்தேதி மாநில முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் திரளாக கலந்துகொண்டு வாழ்த்தினர்.

ம.பி. மாநில சட்டமன்ற சபாநாயகராக இதுவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தடவை முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கும் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சி சார்பாக கொடேகான் சட்டமன்ற எம்எல்ஏ நர்மதா பிரசாத் பிரஜாபதி நிறுத்தப்பட்டி ருந்தார். அவரை எதிர்த்து, பாஜக சார்பில் ஹர்சுத் தொகுதி எம்எல்ஏ குன்வாஜ் விஜய் ஷா நிறுத்தப்பட்டிருந்தார்.

அதையடுத்து சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். இதில் 120 ஓட்டுக்கள் பெற்று காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த நர்மதா பிரசாத் பிரஜாபதி வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் சபாநாயகராக பதவி ஏற்றார்.