போபால்:

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60ல் இருந்து 62ஆக உயர்த்தி மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பல அரசு ஊழியர்களால் பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது. பதவி உயர்வு பெறாமல் எந்த ஒரு அரசு ஊழியரையும் ஓய்வுபெற அனுமதிக்கமாட்டோம். இதன் காரணமாக தான் ஓய்வுபெறும் வயதை 62ஆக உயர்த்தப்பட்டுள்ளது’’என்றார்.

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஜபல்ப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

‘‘அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரித்திருப்பதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். வேலையை எதிர்நோக்கியிருப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள்’’ என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த முடிவு இளைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவது பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.