போபால்

கோமியம் அருந்துவதால் கொரோனாவை தடுக்கலாம் என பாஜக எம் பி பிரக்யா தாகுர் கூறியதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சருக்கு காங்கிரஸ் எம் எல் ஏ கோமியம் அனுப்பி உள்ளார்.

போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு நிகழ்வில் பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாகுர் கலந்து கொண்டார்.   அப்போது அவர், “கோமியம் அருந்துவதன் மூலம் நுரையீரல் தொற்று குணமாகும்.  நான் தினசரி கோமியம் அருந்துகிறேன்.  அதனால் தான் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை.   நான் பலரிடம் இதைச் சோதித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.  இது சர்ச்சையைக் கிளப்பியது.

இதையொட்டி மத்தியப் பிரதேச காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பி சி சர்மா நேற்று முன் தினம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு 2 பாட்டில்கள் கோமியம் அனுப்பி உள்ளார். தென் மேற்கு போபால் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான சர்மா அத்துடன் ஒரு கடிதமும் எழுதி அனுப்பி உள்ளார்.

இது குறித்து சர்மா செய்தியாளர்களிடம், “பிரக்யா தாகுர் ஒரு மூத்த பாஜக தலைவர் மற்றும் போபால் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார்.  அவர் கோமியம் கொரோனா தொற்றைக் குணப்படுத்தும் எனக் கூறி உள்ளார். தற்போது கொரோனா தொற்று கிராமங்களிலும் அதிக அளவில் பரவுகிறது.  கொரோனாவால் பலர் உயிர் இழந்துள்ளனர்.  மக்கள் சிகிச்சைக்கு நகரங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நான் சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஐ சி எம் ஆர் மற்றும் டி ஆர் டி ஓ இதுவரை கோமியம் மூலம் கொரோனா குணமாகும் என நிரூபித்துள்ளதா எனக் கேட்டுள்ளேன்.   அது உண்மை என்றால் கிராமத்து மக்கள் சிகிச்சைக்காக  அலைய வேண்டாம்,   மேலும் உயிர் காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு விரைவில் நீங்கும்.

இது உண்மையா அல்லது மக்களின் மத உணர்வுகளை வைத்து நடக்கும் விளையாட்டா எனச் சந்தேகம் எழுகிறது.  மேலும், தற்போது கொரோனாவுடன் கருப்பு பூஞ்சை பரவலும் அதிகரித்துள்ளது.  அதற்கும் கோமியம் மூலம் சிகிச்சை அளிக்க மத்திய மற்றும் மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளதா?   எனவே இது குறித்து அமைச்சர் அறிவிப்பதன் மூலம் நாம் அனைவரும் கோமியம் அருந்தி கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்.” எனக் கிண்டலாக தெரிவித்துள்ளார்.