மாதவரத்தில் உள்ள ஆவின் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மாதவம் பால்பண்ணை லாக்டவுன் செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது
இந்த நிலையில், கொரோனா பீதி காரணமாக பல சக ஊழியர்கள் வேலைக்கு வராத காரணத்தால், அங்கிருந்து பால் விநியோகம் செய்வது தாமதமாகி உள்ளது. இந்த செய்தி பதிவிடும் வரை (காலை 8 மணி வரை) அங்கிருந்து எந்தவொரு லாரியும் ஆவின் பால்பாக்கெட்டுகளை ஏற்றிச்செல்லவில்லை. ஏராளமான லாரிகள் பால்பண்ணை வளாகத்தில் குவிந்துள்ளன.
சென்னையில் மட்டும் தினமும் 14 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை சப்ளை செய்கிறது ஆவின். இதில், மாதம் தோறும் முன்பணம் செலுத்தி பால் கார்டு பெற்றவர்களுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. மீதியுள்ள 5 லட்சம் லிட்டர் பால் மொத்த வியாபார ஏஜெண்டுகளுக்கு (11 பேர்) தந்து விடுகிறது ஆவின் நிர்வாகம்.
வடசென்னையில் உள்ள மாதவரம் பால் பண்ணையில் தினசரி 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 3 ஷிப்ட்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்தான் பால்பாக்கெட்டுகள் பேக்கிங் பணி மற்றும் டெலி வரி பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், மற்ற தொழிலாளர்கள் தங்களுக்கும் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் வேலைக்கு வருவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் ஏற்றுதல், இறக்குதல் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நேற்று சுமார் 2 மணி நேரம் தாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இன்று இதுவரை பால் லாரிகளில் ஏற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பால் பாக்கெட் பெற வினியோகஸ்தர்களும், பொதுமக்களும் காத்திருந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அங்குள்ள அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். இதனால் வடசென்னை மக்கள் ஆவின் பால் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.