புதுடெல்லி: இந்திய ஐஐடி -களில் எம்.டெக்., படிப்பிற்கான கட்டணங்களை, பி.டெக்., கட்டணங்களுக்கு இணையாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டண உயர்வின் மூலமாக, எம்.டெக்., மாணாக்கர்களின் ஆண்டு கட்டணம் ரூ.2 லட்சம் என்பதாக மாறியுள்ளது. அதேசமயம், இந்தக் கட்டண உயர்வை சமாளிக்க முடியாத மாணாக்கர்கள், அரசின் உதவியைப் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேரடிப் பயன் பரிமாற்றத்தின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பி.டெக்., படிப்பிற்கு வசூலிக்கப்படுவதைப் போலவே, அனைத்து ஐஐடி -களிலும் எம்.டெக்., படிப்புகளுக்கும் ஒரேமாதிரியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமென இதற்கென அமைக்கப்பட்ட உயர்மட்டக் கமிட்டி பரிந்துரை செய்தது.
மேலும், ஐஐடி கல்வி நிறுவனங்கள், ஸ்பான்சர் செய்யப்படும் மாணாக்கர்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்படும் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
புதிய விதியின்படி, ஓசிஐ அட்டை வைத்திருப்போர் ஜேஇஇ மெயின் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.