M-Pox எனும் குரங்கு அம்மை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காங்கோ உள்ளிட்ட 13 ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பரவல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

குரங்கு அம்மை பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 17000க்கும் அதிகமானோர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 500 பேர் வரை மரணமடைந்ததாகவும் தரவுகள் வெளியாகி உள்ளது.

2020 ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்த போது உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது.

ஆனால் தற்போது பரவி வரும் குரங்கு அம்மை நோயின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 3 – 4 சதவீதமாக உள்ளது.

இருந்தபோதும் குரங்கு அம்மை பரவலுக்காக ஊரடங்கு போன்ற லாக்டவுன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்காவை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் M-Pox பரவல் அதிகமாக உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2022 முதல் 2023 வரை சுமார் 116 நாடுகளில் இந்த நோய் தொற்று இருந்தது என்றும் அப்போது சுமார் 93000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது குரங்கு அம்மையின் மற்றொரு வகை பரவல் இருந்தது என்றும் தற்போது அது உருமாறியுள்ளது என்றும் கூறும் மருத்துவ விஞ்ஞானிகள் கடந்த முறை கட்டுப்படுத்தப்பட்டது போன்று இம்முறையும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.