சென்னை: மறைந்த மு.க.முத்துவின் உடல், அவர் பிறந்த இடமான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை (சனிக்கிழமை) காலமானார். வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க. முத்து கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.
மு.க. முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மு.க.முத்து உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படுகிறது.
இதையடுத்து, மு.க.முத்து இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க. முத்து. 1970-களில் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மு.க.முத்து, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, சமையல்காரன் ஆகிய படங்களில் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.
