சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  மூத்த மகனும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான  மு.க.முத்து மறைவிற்கு, துணைமுதல்வர் உதயநிதி,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்பட   அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. அவரது உடல் முதலில், ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது கருணாநிதியின் இல்லமான கோபாலபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.முத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்ற அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து,  அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள்  நேரில்அஞ்சலி செலுத்தி வருவதுடன் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மு.க.முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க விருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மு.க.முத்துவிடன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், கழகத் தலைவர் தளபதி அவர்களின் சகோதரருமான அண்ணன் மு.க.முத்து அவர்கள் உடன் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். துயர் நிறைந்த இவ்வேளையில், அண்ணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மூத்த அண்ணன் – என் பாசத்திற்குரிய பெரியப்பா மு.க.முத்து அவர்கள் மறைவால் தாங்கொணா துயருற்றேன். நம் தலைவர் அவர்கள் மீதும் – என் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்த முத்து பெரியப்பாவின் மறைவு கலைஞர் குடும்பத்துக்கு பேரிழப்பு. மேடை நாடகங்களின் வழியே திராவிட இயக்கக்கொள்கைகளை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். திரைப்பட நடிகராக – பாடகராக கலையுலகில் கால் பதித்து மக்ககளிடம் புகழ் பெற்றார். அவர் மறைந்தாலும் அவருடைய நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிறைந்திருக்கும். முத்து பெரியப்பாவுக்கு என் அஞ்சலிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் மூத்த மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்துவின் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று  தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  மு. கருணாநிதி அவர்களுடைய மூத்த மகன் மு.க. முத்து அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புச்சகோதரர் மு.க. முத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரரு மான மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மு.க.முத்து அவர்கள் தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க.முத்து அவர்கள். பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.

அவரது மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி,மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும் திரைப்பட நடிகருமான மு.க. முத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கலைஞர் அவர்களின் மூத்த மகனும், முதலமைச்சர் அவர்களின் சகோதரரும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். மு.க. முத்து அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள  இரங்கல்  செய்தியில், “முத்தமிழறிஞர் கருணாநிதி – தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.முத்துவின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி,  தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் அவர்களின் மூத்த மகனும்,  தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து  வேதனையடைந்தேன்.  அவரை இழந்து வாடும் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அவர்தம்  குடும்பத்தினருக்கும்,திமுகவைச் சேர்ந்த  சகோதர,சகோதரிகளுக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று  கூறியுள்ளார். .

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்   ஜவாஹிருல்லா மு.க.முத்து அவர்களில் இறுகாப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரமுற்றேன். தந்தையைப் போலத் திரைத் துறையில்தடம் பதித்தவர். அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது இணையதள பக்கத்தில் எழுதியுள்ளார்.

கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்து உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்