சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்க பப்ஜி மதன் மனைவி, சிறைத்துறை அதிகாரிக்கு 3 லட்சம் ரூபாய் தருவதாக பேரம் நடத்திய ஆடியோ வெளியானது. இதையடுத்து, உதவி ஜெயிலர் பணி இடை நீக்கப்பட்டுள்ளார்.
யூ டியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன். இவர், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு பெயர்களில் வீடியோ சேனல்களை நடத்தி வந்தார். இவரது பேச்சு ஆபாசமாக இருந்து வந்தது. இதை பார்க்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சொகுசு வசதிகளை வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.அதில், பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சொகுசு வசதிகளை செய்து கொடுக்க 3 லட்சம் ரூபாய் அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்டதும், அதற்காக பப்ஜி மதன் மனைவி, ஜி பே மூலம் ரூ.25,000 அனுப்பியதாக தகவலும் வெளியானது.
இந்த ஆடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதில் ஆடியோவில் பேசியது உண்மை என்பது தெரிய வந்துள்ளதால், உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.