சென்னை:
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசுக் கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று,அதன் பிறகு மீண்டும் சென்னை துறைமுகம் வரை இரண்டு நாட்களும்,சென்னை துறைமுகத்திலிருந்து விசாகப்பட்டினம் வழியே புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் முறை ஐந்து நாட்களும் பயணிக்கக் கூடிய வகையில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது 11 அடுக்குகள் கொண்ட இந்த கப்பல் நாட்டிலேயே பெரிய சொகுசு கப்பல் ஒன்று. 700 அடி நீளமுள்ள இந்த கப்பலில் 794 அறைகள் உள்ளன. இதில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கக் கூடிய வகையில் கலை அரங்கம், கலை நிகழ்ச்சிகளை காணும் இடங்கள் மற்றும் 10 பெரிய உணவகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், மசாஜ் நிலையம், மதுக்கூடம், கேசினோ,குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து அம்சங்களும் இந்த சொகுசு கப்பலில் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒரே நேரத்தில் 2,600 பேர் பயணிக்க முடியும். இதில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். உயர்வகுப்பு பயணத்திற்கு 2,20,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் சேவையை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் சேவையை அனுபவிக்க தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.