அதிக சம்பள வேலை கிடைக்கும் என்ற ஆசையில் கம்போடியா சென்ற சீன சமூக ஊடக பிரபலமான இளம்பெண் ஒருவர், அங்கு வீதியோரத்தில் வீடில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உமி (Umi) என்ற பெயரில் ஆன்லைனில் பிரபலமான இந்த இளம்பெண்ணுக்கு சுமார் 58 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். சமூக ஊடகங்களில் ஆடம்பர வாழ்க்கையை காட்டி வந்த அவர், தற்போது மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த இந்த பெண், கம்போடியாவில் வசித்து வந்த தனது சீன காதலர் அழைப்பின் பேரில் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. அதிக சம்பளம் தரும் வேலை, இணைந்து நல்ல வாழ்க்கை என அவர் வாக்குறுதி அளித்ததாக குடும்பத்தினரிடம் உமி தெரிவித்திருந்தார்.

ஆனால் கம்போடியா சென்ற பிறகு 26 நாட்கள் வரை குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார். பின்னர் அவர் கம்போடியாவில் ஒரு சாலையோரத்தில், வீடில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அப்போது அவர் கைகளில் கால்களில் காயம் ஏற்பட்டதை காட்டும் எக்ஸ்ரே படங்கள் வைத்திருந்ததாகவும், தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல பேச முடியாத நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பகுதியில் இருந்த ஒரு சீன நபர் உதவி செய்ததைத் தொடர்ந்து, தகவல் சீன தூதரகத்திற்கு சென்றது. இதற்கிடையில், உமியின் குடும்பத்தினர் ஏற்கனவே கம்போடியாவில் உள்ள சீன தூதரகத்தை அணுகி உதவி கோரியிருந்தனர்.
சீன தூதரகம் உடனடியாக கம்போடியா போலீஸ் உள்ளிட்ட பல தரப்பினருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டது. இதையடுத்து, ஜனவரி 3-ஆம் தேதி கம்போடியாவின் சிஹனூக் வில் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் உமி கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடி சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவரை, உடல்நிலை சீரானதும் சீனாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு முன், உமி சமூக ஊடகங்களில் ஆடம்பர வாழ்க்கை குறித்து பதிவிட்டு வந்தார். கடந்த டிசம்பர் தொடக்கத்தில், கம்போடியாவில் வேலை பார்க்கும் தனது காதலர் தன்னை அங்கு வருமாறு அழைத்ததாகவும், பெரிய தொழில் நடத்துவதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் லைவ் வீடியோவில் கூறியிருந்தார்.
சுற்றியிருந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் எச்சரித்தபோதும், அவர் கம்போடியா சென்றதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள அவரது புதிய புகைப்படங்களை பார்த்த சீன சமூக ஊடக பயனர்கள் அதிர்ச்சி மற்றும் வேதனை தெரிவித்துள்ளனர். “இவ்வளவு மோசமான நிலைக்கு அவர் எப்படி சென்றார்?” என கேள்வி எழுப்பி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]