தமிழ்நாட்டில் கோவையை அடுத்து சென்னையில் மூன்று இடங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஷெனாய் நகர், சென்னை சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் ஆகிய மூன்று சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த ஹைப்பர் மார்க்கெட்கள் அமைக்கப்படும்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகள் கூறியதாவது, “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பலவற்றில் உணவகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் இருக்கும் நிலையில் இந்த ஹைப்பர் மார்கெட்டுகள் மக்களே பெரிதும் கவர்வதோடு மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும்” என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த ஹைப்பர் மார்க்கெட் திட்டத்தை லுலு மற்றும் சிஎம்ஆர்எல் நிறுவனத்துடன் இணைத்தது கிரேஸ் சர்வீசஸ் என்ற ஒப்பந்தம் நிறுவனம் செயல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் அடித்தளத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ள ஹைப்பர் மார்க்கெட் ஷெனாய் நகர், அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தவிர, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 40,000 சதுர அடி பரப்பளவில், கான்கோர்ஸ் மட்டத்தில் அல்லது டிக்கெட் வழங்கும் பகுதியில் கட்டப்படும் என்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் டிப்போ ஸ்டேஷனில் கிட்டத்தட்ட 60,000 சதுர அடி இடத்தில் டிப்போவுக்கு மேல் அமைக்கப்படும் என்றும் தெரிகிறது.

இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைக்கும் பணிகள் வரும் ஜூலை தொடக்கத்தில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.