சென்னை
தமிழக அரசின் மாநகர பேருந்துகளில் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கான கட்டணம் குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்குச் சுமை கட்டணம் வசூலிப்பது குறித்த விதிமுறைகளைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் மேலும் 5 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்குச் சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான பயண கட்டணம் எது அதிகமோ அதனைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
தவிர பேருந்துகளில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது. அதைப்போல் பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது.
குறிப்பாகச் செய்தித்தாள்கள் மற்றும் தபால்களைக் கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும். இந்த சுற்றறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.