புதுச்சேரி:

றைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அரசு நிலத்தில் கருணாநிதி சிலை அமைக்க கவர்னர் கிரண்பேடி அனுமதி மறுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, அவரை கவுரவப்படுத்தும்  விதமாக காரைக்கால் நெடுஞ்சாலையின் பெயர் கலைஞர்.Dr.மு.கருணாநிதி என்று அழைக்கப்படும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கப்படும், கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம் அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து காரைக்கால் நெடுஞ்சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கவும், பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கவும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியிருந்தார்.

கருணாநிதி சிலை எங்கு அமைப்பது, எப்படி அமைப்பது என்று தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், கவர்னர் கிரண்பேடி, கருணாநிதிக்கு அரசு நிலத்தில் சிலை வைப்பது தொடர்பான  கோப்பில் கையெழுத்திட மறுத்து வருவதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு நிலத்தில் சிலை வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

“அரசு இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கிடையாது. 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தத் தீர்ப்பை புதுவை மாநில தலைமை செயலாளர் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக புகார் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். தனியார் இடத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இதனால், கடும் கோபம் அடைந்துள்ள முதல்வர் நாராயணசாமி, கருணாநிதிக்கு சிலை வைக்கும் விவகாரத்தில்  உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும், நீதிமன்றத்திலேயே அனுமதி கோரி முடிவெடுப்போம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு புதுச்சேரியில் சிலை எதுவும் வைக்கப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.