மும்பை:
சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருளுக்கான விலையை ரூ.4.50 உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் எல்பிஜி சிலிண்டர்கள், விமான டிக்கெட்களின் விலை அதிகரிக்கவுள்ளது.
மாதாந்திர அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்ளும் அறிவிப்பு வெளியான பின் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை 19 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. மானிய சிலிண்டர் விலை ரூ.4.50 அதிகரிப்பு செய்ததன் மூலம் ஒரு சிலிண்டரில் விலை ரூ.495.69 ஆக உயர்ந்துள்ளது.
மானியம் அல்லாத சமையல் சிலிண்டர்களுக்கு ரூ. 93 அதிகரிப்பு செய்ததன் மூலம் இதன் விலை ரூ.742 ஆக உயர்ந்துள்ளது. மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை 2.66 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
விமான எரிபொருள் விலை அதிகரிப்பு மூலம் தற்போது டில்லியில் ஒரு கிலோ லிட்டர் ரூ. 54,143க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு இதன் விலை ரூ.53,045 என்ற நிலையில் இருந்தது. சுமார் ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 6 சதவீதம் அதாவது ரூ.3,025 ரூபாய் வரை ஒரு கிலோ லிட்டருக்கு உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மத்திய அரசு தனது வெற்று பேச்சுக்களை விட்டுவிட்டு விலை உயர்வை குறைக்க எதாவது செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தோடு மானியத்தை ரத்து செய்யும் வகையில் கடந்த ஆண்டு எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.