சென்னை: தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கிழக்கு திசை காற்றின் காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வருகிற 5ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.