சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.

இன்று காலை 5.30 மணியளவில் தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுச்சேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக் கூடும். இதன் காரணமாக வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னைக்கு இன்று (அக்.14) கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை (அக்.15) மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் (அக்.16) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். சென்னையில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 115.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 204.4 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 17ம் தேதி வரை சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள வடதமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது”

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையமும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள சூழலில் அக்.15, 16-ம் தேதிகளில் வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று  தெரிவித்திருந்தது. மேலும், தென்னிந்திய பகுதிகளில் கிழக்கு, வடகிழக்குதிசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கத்தால், தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வரும் 15 அல்லது 16-ம் தேதி தொடங்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tropical weather outlook imd report 14-10-24