சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்பதால், பல பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 27, 28ந்தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில்  குறைந்த காற்றழுத்த  தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். இது  அடுத்த ஓரிரு நாட்களில்  மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகரும். இந்த  காற்றழுத்த  தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி, சென்னையில், வரும் 27,28 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகதெரிவித்துள்ளது. அதுபோல இன்று ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.