கோவை:

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுககு சொந்தமான கோவை வீட்டில் ரூ. 8.25 கோடி ரொக்கத்துடன் ரூ25 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டில் கடந்த 5 நாட்க ளாக அதிரடி சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், அவரது வீட்டில் யாரும் கண்டறிய முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மார்ட்டின். இவர் நாடு முழுவதும் லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 70 இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். கோவையில் 22 இடங்களிலும், சென்னை யில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18 இடங்களிலும் மற்றும் மும்பை, சிலிகுரி, கவுகாத்தி, ஹைதராபாத், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கோவையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது இல்லத்திலும், அதன் அருகிலேயே உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலும் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். மார்ட்டி னின்  வீட்டில் ஒரு பக்கம் சிறிய ஏணிப்படிகள் போன்ற அமைப்பு இருந்த நிலையில், சுவரைத் தட்டிப் பார்த்த வருமானவரித்துறை அதிகாரி, சந்தேகத்தின்பேரில், அந்த சுவரை உடைத்தபோது, அதன் பின் ரகசிய  அறை இருப்பதும் தெரிய வந்தது. அந்த  ரகசிய அறைக்குள் நுழைந்த வருமான வரித்துறையினர், அங்கு கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர்.

அங்கு மொத்தம் 500, 200 ரூபாய் கட்டுகள் என ரூ.8.25 கோடி பணம் இருந்தது. இதில், 5 கோடி பணத்துக்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் சார்பில்  595 கோடி வரி  ஏய்ப்பு  முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும்,  அங்குள்ள ரகசிய அறையில் ரூ.8.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதில் 5.8 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு ரூ.24.57 கோடி என்றும் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில் மார்ட்டினின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேஷியர் பழனி என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்ச முத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் மாநில துணைப் பொதுச்செயலராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.