கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் திருணாமுல் வெற்றி  பெற்று ஒரு மாதம் ஆகியும் பாஜக சென்றவர்கள் தொடர்ந்து திரும்பி வர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குணால் தோஷ்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ஆளும் திருணாமுல் காங்கிரஸில் இருந்து ஏராளமானோர் பாஜகவுக்கு மாறினர்.  இது அப்போது மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.   இதனால் திருணாமுல் கட்சி உடையும் எனவும் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் எனவும் பேசப்பட்டது.

ஆனால் மே மாதம் 2 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் இது நேர்மாறாக மாறியது தெரிய வந்தது.  மம்தா பானர்ஜி மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.  பாஜகவுக்கு 77 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.  இது பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது.

பாஜக வெற்றி பெறும் என நம்பி கட்சி மாறிய முன்னாள் திருணாமுல் காங்கிரசார் நிலை மிகவும் மோசமாகி உள்ளது  இவர்களில் பலருக்குத் தேர்தல் வாய்ப்பு அளிக்கப்பட்டு அதில் தோல்வியைத் தழுவி உள்ளனர்.  எனவே மீண்டும் திருணாமுல் காங்கிரஸுக்கு வர இவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இது குறித்து திருணாமுல் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குனால் கோஷ், “திருணாமுல் காங்கிரஸில் இருந்து பாஜக சென்றவர்களில் பலர் மீண்டும் கட்சிக்கு வர ஆர்வம் காட்டுகின்றனர்.  அது மட்டுமின்றி பாஜகவில் தற்போது வெற்றி பெற்றுள்ள சுமார் 7 அல்லது 8 சட்டப்பேரவை உறுப்பினர்களும் திருணாமுல் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்” எனக் கூறி உள்ளார்.

மேலும் அவர் “நாங்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.  இந்த தலைவர்கள் தேர்தலுக்கு வெகு சில தினங்களுக்கு முன்பு பாஜகவுக்கு சென்றவர்கள் ஆவார்கள்.   இவர்களைப் பெருமளவில் எங்கள் கட்சி தொண்டர்கள் தோற்கடித்துள்ளனர்.  அவ்வாறு இருக்க நாங்கள் எப்படி இவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.