பெங்களூரு: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்ததால், என்மீதான நல்லெண்ணம் பாழ்பட்டு போனது, மக்களிடையே எனக்கிருந்த நல்ல பெயரை இழந்துவிட்டேன் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும்,  ஐக்கிய  ஜனதாதளம் தலைவருமான எச்.டி.குமாரசாமி புலம்பியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜேடிஎஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அவர்களுக்கு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு கொடுக்க 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் குடைச்சல், பாஜகவின் அரசியல் பேரம்  காரணமாக, அவரது ஆட்சி கவிழ்ந்தது.  சுமார் 13 மாதங்கள் மட்டுமே அவரது தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அதையடுத்து, பாஜக ஆட்சியை கைப்பறியது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐக்கியஜனதாதளம் தலைவரான, முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது தலைமையிலான கூட்டணி ஆட்சி குறித்து, வாய் திறந்துள்ளார். மாநில காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். காங்கிரஸ் கட்சியுடனான எனது கூட்டணி காரணமாக 12 ஆண்டுகளில் நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன். மக்களிடையே என்மீது இருந்து வந்த நல்லெண்ணம் பாழாகிவிட்டது என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி,   காங்கிரஸுக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால்கூட, நான் இப்போதுவரை முதல்வர் பதிவில் நீடித்திருப்பேன் என்று கூறியது மட்டுமின்றி,  2018-ல் முதல்வரான பிறகு ஒரு மாதத்தில் நான் ஏன் கண்ணீர் சிந்தினேன்? என்ன நடந்தது என்பது எனக்குத்தான் தெரியும்.  பாஜக எனக்கு தீங்கு செய்யவில்லை, காங்கிரஸ்தான் எனக்கு தீங்கு செய்தது என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.