சித்தேரி: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கங்களை போதிக்க வேண்டிய பேராசிரியரே, ஒழுக்க கேடாக ஆன்லைன் ரம்மி மோகத்தில் சிக்கி பணத்தை இழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் ( வயது42). இவர் திருத்தணி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தினகரன் எப்போதும் மொபைலிலேயே இருப்பார் என கூறப்படுகிறது. மேலும், மொபைல் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமும் இருந்துள்ளது. இதில் அவ்வப்போது பணம் கட்டி விளைடி வந்த நிலையில், சில நேரங்களில் கிடைக்கும் சொற்ப வெற்றினை மனதில்கொண்டு, பெரும் வெற்றி கிடைக்கும் என நம்பி, இதுவரை பலரிடம் கடன் வாங்கி , ரம்மியில் போட்டு, ரூ.20 லட்சம் வரை இழந்ததாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடன்காரர்களும் நெருக்கியதால், அந்த கடனை அடைக்க வீட்டுக்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கி கடனை அடைத்துள்ளடன் கையில் இருந்த பணத்தைக்கொண்டு, மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும் கூறப்படுகிறது. இதில் தோல்வி அடையே மேலும் சிலரிடமும், ஆன்லைன் கடன் செயலிகளிலும் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் வாங்க கடனை திருப்பி அடைக்காத காரணத்தால், அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மேலும் கல்லூரியில் சரிவர பணிக்கு செல்லாமலும் இருந்துள்ளார். இதனால், கல்லூரி நிர்வாகம் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளான பேராசிரியர் தினகரன், சித்தேரி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன்பு விழுந்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரயில் என்ஜின் ஓட்டுநர், சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த தினகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில் அவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.