
சிவபெருமானின் மூத்த மகன் வீரபத்திரர்
உலகில் மிக உயர்ந்த செல்வம் வீரமேயாகும் . வீரத்தால் அடைய முடியாத பொருளில்லை . அதனாலேயே நமது தெய்வங்கள் வீர தெய்வங்களாக சித்தரிக்கப்படுகின்றன.
காளி , துர்க்கை , சப்தமாதர்கள், முதலான தெய்வங்கள் போர் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர்… மிகச் சாந்த மாக விளங்கும் மகாலட்சுமி கூட, ”கோலாசுரன்” என்கிற அசுரனை உக்ரமான போரில் அழித்து ” கோலாசுர பயங்கரி ” என்று பெயர் கொண்டுள்ளாள் !
திருமால் தசாவதாரங்கள் எடுத்து அநேக அசுரர்களை அழித்தார். சாந்த சொரூபியான பிரம்மதேவன் கூட போர் கோலம் பூண்டு அசுரர்களை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன .
எல்லையற்ற வீரத்தின் இருப்பிடமாகத் திகழும் சிவபெரு மானும் , உலக நலம் பொருட்டு அனேக அசுரர்களை வென்றடக்கி அருள் புரிந்துள்ளார் . அவை , அவருடைய அளவற்ற ஆற்றலுக்கும் , வீரத்துக்கும் அடையாளமாக உள்ளன .
அவை அனைத்தையும் நம்மால் நினைவில் நிறுத்த முடியாது என்பதால் ஆன்றோர்கள் அவற்றில் எட்டை வரிசைப் படுத்தி ”அஷ்ட வீரட்டம்” என்று போற்றி நாம் வணங்க வகை செய்துள்ளனர் .
அஷ்ட வீரட்டம்
பிரம்மனின் சிரம் கொய்தது (கண்டியூர் எனும் தலத்தில்)
எமனை காலால் உதைத்து அழித்தது. (திருக்கடவூர் எனும் திருத்தலத்தில்)
முப்புரம் எரித்தது ( திருவதிகை எனும் தலத்தில்)
யானையை உரித்து அதன் தோலை போர்வையாகப் போர்த்திக் கொண்டது (வழுவூர் தலம்)
தட்சனின் யாகத்தை அழித்தது (திருப்பறியலூர் எனும் தலத்தில்)
அந்தகனை வதைத்தது ( திருக்கோவலூர் எனும் தலத்தில் )
காமனை அழித்தது ( கொருக்கை எனும் தலத்தில் )
ஜலந்தரனை அழித்தது ( திருவிற்குடி எனும் தலத்தில் )
இப்படி வரிசைப் படுத்தியுள்ளனர் .

இவற்றுள் , இரண்டில் மட்டும் பெருமான் தான் நேரடியாகச் செல்லாமல் தன அருட்பார்வையில் உண்டான உக்கிரகுமாரர்களாகிய வீரபத்திரர் , பைரவர் ஆகியோரை அனுப்பி , முறையே பிரம்மன் , தட்சன் ஆகியோர் தலைகளைக் கொய்து தண்டித்து அருள் புரிந்ததாக புராணங்கள் கூறுகிறது.
அதிலும் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி உன்னத வெற்றியாகவும் தனி வரலாறாகவும் போற்றப்படுகிறது .
மேற்சொன்ன எட்டு வீரட்டங்களுள், ஏழில் தேவர்களுக்கு உதவவே பெருமான் போர் புரிந்தார் . ஆனால் , தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களுக்கு எதிராகப் போரிட்டு அவர்களைக் கடுமையாக தண்டித்தார்
அவர்கள் ஒவ்வொருவரும் வீர குமாரனாகிய வீர பத்திரரால் தண்டிக்கப் பட்டது பெருமானின் தனித்தனி வீரதீர பராக்ரமங்களாகவே போற்றப்படுகின்றன
தட்சனையும் , அவனது யாகத்தையும் அழிக்க சிவபெருமானால் தனது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப் பட்ட வீரபத்திர மூர்த்தி தனிப் பெரும் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.
பராசக்தியால் உண்டாக்கப் பட்ட பத்ரகாளி , அவருக்கு தேவியாகத் திகழ்கிறாள் . இவ்விருவரும் தட்ச யாகத்தை சம்ஹரித்த நிகழ்வு புராணங்கள் , வேதம் , மகாபாரதம் மகாஸ்காந்தம் பாகவதம் முதலானவற்றிலும் மற்றும் தமிழில் ,தட்சயாகபரணி , கந்தபுராணம் , காஞ்சிப்புராணம் , பறியலூர் புராணம் முதலியவற்றிலும் காணலாம் .
” வீரம் ” என்பதற்கு ” அழகு ” என்றும் , ” பத்திரம் ” என்பதற்கு ” காப்பவன் ” என்றும் பொருள் .
தென்னகத்துச் சைவர்கள் வீரபத்திரரை துணைத் தெய்வமாக தனிச் சன்னதியில் வைத்து வழிபடு கின்றனர் . பின் , வட நாட்டிலிருந்து வீர சைவர்கள் தென்னாட்டிற்குப் பரவிய பின்னரே வீரபத்திர ருக்கு தனி ஆலயங்கள் அமைக்கும் வழக்கம் வந்ததென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் .
தமிழகத்தில் திருவண்ணாமலை , மயிலாப்பூர் , அனுமந்தபுரம் , தாராசுரம் , கும்பகோணம் , திருக்கடவூர் , மற்றும் பெரும்பேர்கண்டிகை முதலான தலங்களில் வீரபத்திரர் ஆலயங்கள் உள்ளன .

சென்னை – திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் ஏறத்தாழ சென்னையிலிருந்து 35 கி.மீ தொலைவில் சிங்கபெருமாள் கோயில் எனும் ஊர் உள்ளது . இவ்வூரின் தென் கிழக்கே 7 கி. மீ தொலைவில் அமைந்துள்ள அனுமந்தபுரம் ஆலயம் வீரபத்திரருக்கான சிறப்பு ஆலயமாக கருதப்படுகிறது .
சாலை ஓரத்தில் வடக்கு நோக்கியவாறு பெரிய அளவில் ஆலயம் அமைந்துள்ளது . ஆலயத்தின் முன்புறம் பெரிய குளமும் , கிணறும் உள்ளன . ஆலய முகப்பினைக் கடந்ததும் , நீளமான தகர கொட்டகை உள்ளது . அதை ஒட்டி ஆலயத்தைச் சுற்றி அகன்ற பிராகாரம் உள்ளது . பிராகாரத்தில் அமைந்துள்ள துர்க்கை சன்னதி , மற்றும் பத்ரசண்டீசர் சன்னதியையும் வணங்கி , பிராகாரத்தை வலம் வந்து மகாமண்டபத்தை அடைகிறோம் . அங்குள்ள நந்திதேவரை வணங்கி , பின் உல் வாயிலிலுள்ள முருகன் , விநாயகரை வணங்கி .கிழக்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியையும் வணங்கி பின் அர்த்தமண்டபம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரரை தரிசிக்கிறோம் .
கிட்டத் தட்ட எட்டு அடி உயரம் கொண்ட கம்பீரமான உருவத்துடன் , மேற்கரங்களில் வில்லும் , அம்பும் , கீழ்க் கரங்களில் கத்தி , கேடயத்தையும் தாங்கியவராக எழுந்தருளியுள்ளார் ! இவரைச் .சுற்றி அமைந்துள்ள கல்திருவாசியில் வலது கால் புறத்தில் தட்சன்
நின்றிருக்க .வீரபத்திரரின் தலையில் சிவலிங்கம் அமைந்துள்ளது ! வீரபத்திரர் எழுந்தருளிய சுவாரசியமான வரலாற்றை சற்று பார்ப்போமா
தட்ச சம்ஹாரத்திற்குப் பின் , வீரபத்திரரும் , பத்ரகாளியும் தமது கணங்களுடன் பெருமானை வணங்கபெருமான் அவர்களை தென்னகம் சென்று குடியேறும்படி அனுக்ரஹிக்க அதன் படி அவர்கள் விண் வழியே சென்று கொண்டிருந்த போது
வெற்றிலைத் தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள இந்த இடம் அவர்களுக்குப் பிடித்துப் போகவே .இங்கு தங்கினர் .
தட்ச யாகத்தில் உயிரிழந்து பேய்களான மனிதர்களும் , தேவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர் . வீரபத்திரர் இங்கு சிவ பூஜை செய்து அவர்களுக்கு விபூதி அளிக்க அவர்களின் பேய் வடிவம் ஒழிந்தது !.மனம் மகிழ்ந்த அவர்கள் அவரை வணங்கி,
” சிவ குமாரனே எங்கள் மனக்கலக்கம் அழிந்ததுடன் பேய் வடிவமும் தொலைந்தது போல் உம்மை வழிபடும் அன்பர்களுக்கும் நடை பெற வேண்டும் ” என்று வேண்டினர் . அதன் படி இன்றளவும் மன நலம் குன்றியோர் , மற்றும் பில்லி, சூன்யம் , ஏவல் இவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து இவரை வழிபட்டு குறை நீங்கப் பெறுகிறார்கள் !

” அரன் ” மைந்தனாகிய வீரபத்திரர் வீற்றிருப்பதால் இத்தலம் அரன்மைந்தபுரம் என்றழைக்கப்பட்டு , பின் மருவி .அனுமந்தபுரம் ஆனதென்பர் .
இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் வீரபத்திரருக்கு ஒரு விசேஷ அம்சம் உண்டு !
அதாவது , இம் மூர்த்தி தன்னை உள்ளன்புடன் வழிபடுவோர்க்கு
காலை வேளையில் குழந்தைப் பொலிவுடனும் ,
உச்சி வேளையில் வாலிபத்தோற்றத்துடனும் ,
மாலை வேளையில் வயோதிகததோற்றத்துடனும் காட்சியளிக்கிறார் !!
அதிலும் வெள்ளிக் கவசத்துடன் காணும் போது மனம் பரவசமாகிறது !,,,நெஞ்சு குளிர்கிறது !
இக்கோயிலில் நான்குகால பூஜை சிவாச்சாரியாரால் நடத்தப் படுகிறது .
மகா சிவராத்திரியில் பெரிய இடப வாகனத்தில் வீரபத்திரர் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும் . இவருக்கு வெற்றிலைப் படல் சாற்றுவது மிக விசேஷமான பிரார்த்தனையாகக் கருதப் படுகிறது . ( வெற்றியைக் குறிக்கும் இலையே வெற்றிலையாகும் )
வெற்றிலைபடல் என்பது , சுவாமியைச் சுற்றி அதற்கென உள்ள பிரபையில் வெற்றிலைகளை பொருத்தி அமைக்கின்றனர் . அரை வெற்றிலைப் படலுக்கு
6400 வெற்றிலைகளும் , முழுப்படலுக்கு 12800 வெற்றிலைகளும் பயன் படுத்தப் படுகின்றன . மேலும் வெண்ணைக்காப்பும் இங்கு சிறந்த பிரார்த்தனையாகும் . ஒவ்வொரு அமாவாசையன்றும் திரள் திரளாக மக்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள் !குறிப்பாக மன நலம் குன்றியோர் , பில்லி சூன்யம் இவைகளால் பாதிக்கப் பட்டோர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்து நீக்கப் படுகின்றன.

ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”
இப்படி திருச்செந்தூர்ப் புராணத்தால் வீரபத்திரக் கடவுள் போற்றப்படுகிறார். இங்கே வீரபத்திரப் பெருமான் கையில் வாளுடன் விளங்குவதாகவும், பரம்பொருளை நிந்தனை செய்து நாஸ்தீகத் தனமாக வேள்வி செய்த தக்கப் பிரஜாபதியின் கொட்டத்தை அழித்த வீரராகவும் போற்றப்படு கிறார். இப்பெருமானின் வணக்க முறைமை இந்துக்களின் வீரத்தின் சாட்சியாகவும், வீரத்தின் விளை நிலமாகவும் விளங்குகிறது.
Patrikai.com official YouTube Channel