உத்திர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிர்வாகத்திற்கும் உ.பி. மாநில அரசுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையில் பகவான் கிருஷ்ணர் தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் நிதியிலிருந்து 500 கோடி ரூபாயை மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பழைய மத்தியஸ்தராக இருந்த கிருஷ்ணர்… தயவுசெய்து இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கவும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மேலும், அவசரச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை முதலில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரிபார்க்கும் என்றும், இந்த விவகாரத்தில் மாநில அரசு அவசரம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது.

அவசரச் சட்டத்தின் அரசியலமைப்பு குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இந்த விவகாரத்தை தீர்க்க ஒரு குழுவை முன்மொழிந்தனர்.

முன்னதாக மே 15 அன்று, உச்ச நீதிமன்றம், உத்தரப்பிரதேச அரசு கோயில் நிதியைப் பயன்படுத்தி வழித்தடத்தை அமைக்க அனுமதித்தது.

இருப்பினும், நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தையை உத்தரவை வாபஸ் பெற வாய்மொழியாக உத்தரவிட்டதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.