நைரோபி: உலகளவில், தற்போது ஒரேயொரு ஆண் வெள்ளை ஒட்டகச் சிவிங்கி மட்டுமே இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த ஒட்டகச் சிவிங்கியின் உடலில் ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், அந்த வெள்ளை ஒட்டகச் சிவிங்கியின் நடமாட்டத்தை அறிய முடிவதுடன், அதை வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம், இந்த ஒட்டகச் சிவிங்கியின் பெண் துணையும், குட்டியும் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண் ஒட்டகச் சிவிங்கி மட்டும் தனித்து விடப்பட்டுள்ளது. இந்த ஒட்டகச் சிவிங்கிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
ஜீன்களின் ஒரு அபூர்வ மரபணு பண்பானது, இப்படியான வெள்ளை நிறத்தை உருவாக்குகிறது. தற்போது, இந்த ஒற்றை ஒட்டகச் சிவிங்கியானது, சோமாலிய எல்லையருகே, கென்யாவின் வறண்ட சாவன்னா பிரதேசத்தில் சுற்றி திரிகிறது.
தற்போது, இந்த ஒட்டகச் சிவிங்கியின் உடலில் ஜிபிஎஸ் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதன் மூலம், அதன் இருப்பிடத்தை, ஒவ்வொரு மணிநேரத்திலும் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.