பிரசஸ்ல்: கொரோனாவின் இரண்டாவது அலை, தற்போது ஐரோப்பாவில் துவங்கியிருப்பதாலும், குளிர்காலம் நெருங்குவதாலும், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனாவைக் கண்டறிவதற்கான ஆண்டிஜன் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டுமென்று ஐரோப்பிய யூனியனின் நிர்வாக அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுடன் ஒப்பிடுகையில், ஆன்டிஜன் பரிசோதனைகள் துல்லியம் குறைந்தவை. ஆனால், விரைவாக முடிவுகள் கிடைக்கக்கூடியதாகவும், செலவு குறைவானதாகவும் இருப்பதால், இந்தப் பரிசோதனை முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில், நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள், ஐரோப்பிய யூனியனில் மீண்டும் துவங்கப்படும் நிலையில், இந்த அவசரப் பரிசோதனை நடவடிக்கையை, யூனியனின் 27 நாடுகளும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா முடக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து துறையும், இந்த அவசரகால பரிசோதனையை பெரிதும் ஆதரிக்கிறது.

ஏனெனில், இதன்மூலம் விமானப் பயணத்திற்குப் பிந்தைய தனிமைப்படுத்தல் நவடிக்கையிலிருந்து விடுபடலாம் என்பது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தப் பரிசோதனையின் மூலமாக, வைரஸ் பரவலைப் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.