லண்டன்
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொலைத்த மணிபர்சை தனது வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தின் மூலம் திரும்பப் பெற்றுள்ளார்.
லண்டன் நகரைச் சேர்ந்த டிம் காமரூன் என்பவர் கடந்த 14 ஆம் தேதி அன்று தனது பணியில் இருந்து சைக்கிள் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது மணிபர்சை தவற விட்டுவிட்டார். அந்த பர்சில் அவருடைய பெயரைத் தவிர வேறு எந்த ஆவணமும் இல்லை. அதனால் அந்த மனிபர்ஸ் திரும்பக் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளார்.
டிம் தனது வங்கிக் கணக்கைப் பார்த்த போது சம்பந்தமே இல்லாத ஒருவர் நான்கு முறை ஒரு பென்னியை செலுத்தி உள்ளார். இந்தியாவில் ஒரு பைசா என்பதைப் போல் லண்டனில் ஒரு பென்னி ஆகும். ஒவ்வொரு முறை பணம் செலுத்திய போதும் அதில் ஒரு சிறு செய்தியைப் பணம் செலுத்தியவர் அனுப்பி உள்ளார்.
டிம் அந்த நான்கு செய்தியையும் இணைத்துள்ளார். அதில், “ஹாய், நான் உங்கள் பர்சை சாலையில் கண்டெடுத்தேன்.” எனத் தெரிவிக்கப்பட்டு ஒரு தொலைப்பேசி எண் அளிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது பரசைத் திரும்பப் பெற்றுள்ளார். அத்துடன் இந்த நிகழ்வை டிவிட்டரில் பதிந்து அந்தப் பதிவு 33000 பேரால் மறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த பரசைக் கண்டெடுத்தவர் பெயர் சைமன் பைஃபோர்ட் என்பதாகும். அவர் டிம் சென்ற அதே வழியில் சைக்கிளில் வரும் போது பர்ஸ் கிடைத்துள்ளது. அதில் டிம் காமரூன் என்னும் பெயர் மட்டும் இருந்ததால் உரிமையாளரை அவர் முக நூல் மூலம் தேடி உள்ளார். அது முடியாததால் இந்த ஒரு பென்னி வங்கி முதலீட்டைச் செய்து அதன் மூலம் கண்டுபிடித்துள்ளார்.