உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டன.
அங்கு மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 38 இடங்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சமாஜ்வாதி 37 இடங்களில் போட்டியிடும். அஜீத்சிங்கின் ஆர்.எல்.டி .கட்சிக்கு 3 தொகுதி களை தந்துள்ளனர் அகிலேஷ் யாதவும், மாயாவதியும்.
சோனியாவின் ரேபரேலி தொகுதியிலும், ராகுலின் அமேதி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்த மெகா கூட்டணிக்குள் –காங்கிரஸ் வருவதற்கான கதவை சாத்தி விட்டன-இரு கட்சிகளும்.
பெரும்பாலான நகர்ப்புற தொகுதிகளை அகிலேஷ் வைத்து கொள்ள-கிராமப்புற தொகுதிகள் மாயாவதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் ஜாம்பவான்களை நேரடியாக சந்திக்க போகிறது-சமாஜ்வாதி.
பிரதமர் மோடியின் வாரணாசி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் லக்னோ ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாதி நிற்கிறது. உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த தேர்தலில் வென்ற பா.ஜ.க.கோட்டையான கோரக்பூரிலும் சமாஜ்வாதி கட்சியே போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. சமாஜ்வாதி -5 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் நடந்த இடைத்தேர்தலில் இரு இடங்களை மாயாவதி உதவியுடன் கைப்பற்றி இருந்தார்- அகிலேஷ்.
நேற்று மெகா கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் லக்னோவில் நடந்தது.
அப்பா முலாயம் சிங்குடன், அகிலேஷ் யாதவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
‘’மாயாவதி கட்சிக்கு இவ்வளவு இடங்களை கொடுத்தது தவறு..’’ என்று மகனை கடிந்து கொண்டார் –முலாயம்..
– பாப்பாங்குளம் பாரதி