சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் மீண்டும் பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோட் ஷோ நடைபெறும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து, மாநில பாஜக தலைவர் அண்ணாமைலை வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்தவெளி வேனில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர்களுடன் கரு நாகராஜன், கராத்தே தியாகராஜன், மைத்ரேயன், எஸ்.ஜி.சூர்யா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, சென்னை மக்கள் திமுக ஆட்சியாளர்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகின்றனர். கண்டிப்பாக சென்னைக்கு ஒரு மாற்றம் தேவை. அனைத்து பதவிகளிலும் இருப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் சிங்கார சென்னையை சிக்கி சென்னையாக மாற்றி உள்ளனர். இதை மாற்றுவதற்கு நமக்கு கிடைத்திருக்கும் மருந்து தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமே.
தமிழக அரசியல் களத்தில் சில குடும்பத்தினர், நான்கு, ஐந்து தலைமுறைகளாக நாற்காலியில் ஃபெவிகால் போட்டு அமர்ந்து உள்ளனர். திமுகவை சேர்ந்தவர்கள் பொய்யாக பேசிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நமக்கு உண்மை பேசுகின்ற கடமை உள்ளது. கெட்டவர்கள் ஏன் ஆட்சிக்கு வருகிறார்கள் என்றால் சில நல்லவர்கள் பேச மறந்து விடுகிறார்கள். எனவே வருகின்ற தேர்தலில் நல்லவர்கள் அனைவரும் பேச வேண்டும்.
ஆனால் நமது வேட்பாளர் இரண்டு மாநிலங்களின் ஆளுநர் பதவியையும் துறந்துவிட்டு மக்கள் பணி செய்ய வந்துள்ளார். உறுதியாக மோடியின் 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழிசை அவர்கள் ஒருவராக இருக்க போகிறார். தமிழிசை 5 ஆண்டுகள் உறுப்பினராக வேலை செய்ய வேண்டும் என்றால் வருகின்ற 20 நாட்கள் ஒவ்வொரு தொண்டரும் வீடு வீடாக, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு 20வது நாளில் ஒவ்வொருவரும் 100 ஓட்டுக்களை பெற வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் வேட்பாளர் போன்று பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசியவர், இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல விரும்புகின்றேன். உங்களைப் பார்ப்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் சென்னை வருவார், வந்து கொண்டிருக்கிறார். சென்னையில் “ரோட் ஷோ” நடக்கும். நீங்களும் அருகில் இருந்து மோடியை பார்க்கலாம். எனவே தமிழிசை சௌந்தரராஜன் அவர்களது வெற்றியை உறுதிப்படுத்துங்கள் என்று கூறினார்.