டெல்லி,
லோக்பால் மசோதா தொடர்பாக அமைச்சர்கள் குழுவுடன் மத்திய உள்துறை அமைச்சர் மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
பணம் செல்லாது என்று அறிவிப்புக்கு பிறகு, நாட்டில் பல இடங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் பணப்பதுக்கலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லோக்பால் விரைவில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்திய நகர்புற மேம்பாட்டு துறை மந்திரி வெங்கையா நாயுடு, பொதுக் குறைகள் மற்றும் பென்ஷன் துறை மந்திரி ஜிதேந்தர சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷி, பயிற்சி துறை செயலாளர் சஞ்சய் கோதாரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்ட திருத்தா மசோதா குறித்து ஆலோசனை நடைபெற்றது.
லோக்பால் சட்டம்:
நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் முறைகேடுகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிப்பதற்காக கொண்டு வரப்பட்டது.
“லோக்பால்` சட்டம். இது கடந்த 2014-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் திருத்த மசோதா இந்த ஆண்டு ஜூலை மாதம் லோக்சபா மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் அரசியல்வாதிகள், உயர்அதிகாரிகள் ஊழல் செய்வது குறையும் என்று நம்பப்படுகிறது.