டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளதாக இரு அவைகளின் தலைவர்களும் அறிவித்து உள்ளனர்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி  தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெறும் என்றும். மொத்தம் 19அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் வேளாண்சட்டம் வாபஸ் மசோதா உள்பட  26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

அதன்படி, முதல்நாள் கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. ஆனால், வேளாண் சட்டம் வாபஸ், லக்கிம்பூரி வன்முறை, கொலை சம்பவம், பிகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்பட  பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.  ராஜ்யசபாவிலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், அவைகளில் அலுவல் பணி நடைபெறாமல் அவைகள் அடிக்கடி ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த அமளிகளுக்கு இடையேயும், டேட்டா பாதுகாப்பு மசோதா, வோட்டர் ஐடி உடன் ஆதார் எண் இணைப்பு மசோதா உள்பட 9 மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இதைத்தொடர்ந்து,  நாளை வரை  நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்றுடன் நிறைவு பெறுவதாக இரு அவைகளின் தலைவர்களும் அறிவித்து உள்ளனர்.

முன்னதாக டெல்லி, நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜு, அனுராக் தாகூர், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.