டில்லி

க்களவை தேர்தலுக்கான தேதிகள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடப்பு மக்களவையின் ஆயுட்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், எதிர்க்கட்சிகள் பாஜக வை ஆட்சியில் இருந்து நீக்கவும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்ற முறை மக்களவை தேர்தல் மார்ச் மாதம் 5 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இம்முறை இன்று மாலை தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

டில்லி நகரில் விஞ்ஞான பவனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்ததாவது :

தேர்தலை நடத்த தலைமைச் செயலர், மத்திய அரசு செயலர், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாநில மற்றும் மத்திய அரசியல் கட்சிகள் ஆகியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வேட்பு மனு அளிக்கும் கடைசி தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும்.

தற்போது 23 மாநிலங்களில் வாக்காளர் அட்டைகள் 100% வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இம்முறை 8.4 கோடி வாக்காளர்கள அதிகரித்துள்ளனர்.  18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர்கள் 1950 என்னும் டோல் ஃபிரீ எண் மூலம் தங்கள் வாக்காளர் பட்டியல் இருப்பை சோதனை செய்துக் கொள்ளலாம்.

சென்ற முறை மொத்தம் 9 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 10 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் அமைக்கப்படும்..

தேர்தல் நன்னடத்தை விதிகள் இப்போதிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.   ஒலிபெருக்கிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உபயோகப்படுத்த கூடாது. சுற்றுப்புற மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தலை அமைதியாக நடத்தவும் மக்களின் அச்சத்தை போக்கவும் பாதுகாப்பு படையினர் உதவ உள்ளனர். அத்துடன் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் அனைத்து கட்டத்திலும் மேற்பார்வை இடுவார்கள்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்ட் ஆப் மூலம் புகார் அளிக்க முடியும். புகார் அளிப்போரது அடையாளம் வெளியிடப்படாது. அரசியல் விளம்பரங்களை இணைய தளத்தில் வெளியிட முன் அனுமதி பெற வேண்டும்.

தற்போது மக்களவை தேர்தல்கள் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளன

.
முதல் கட்ட வாக்குப்பதிவு 11/04/19 – 91 தொகுதிகள் 20 மாநிலங்கள்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 18/4 /19 – 97 தொகுதிகள் 13 மாநிலங்கள்

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 23/4/19 – 115 தொகுதிகள் 14 மாநிலங்கள்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு 29/4/19 – 71 தொகுதிகள் 9 மாநிலங்கள்

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 6/5/19 – 51 தொகுதிகள் 7 மாநிலங்கள்

ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 12/5/19 – 59 தொகுதிகள் 7 மாநிலங்கள்

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 19/5/19 – 59 தொகுதிகள் 7 மாநிலங்கள்

என நடைபெறுகிறது.

அனைத்து தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை 23/5/19 அன்று நடைபெறுகிறாது/

தமிழகத்தில் மக்களவை மற்றும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது

ஆந்திரா, ஒரிசா, அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அம்மாநில மக்களவை தேர்தல் நடைபெறும் அதே தேதியில் நடை பெற உள்ளன.