டெல்லி: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிப்பு மார்ச் 16ந்தேதி மாலை வெளியானது. அதனப்டி, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதேபோல் 2-ம் கட்டமாக நடைபெறும் தேர்தல்கள் ஏப்.26-ம் தேதி நடைபெறும் எனவும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஒவ்வொரு கட்டத்தின் வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல் மற்ற மாநிலங்களுக்கு தனியார், அரசு நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.