டெல்லி: மக்களவை தேர்தல்2024ஐ ஒட்டி, நாளை (ஏப்ரல் 26ந்தேதி)  கேரளா, காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்குஅனுப்பி வைக்கும்பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி மாலை 6மணிக்கு முடிவடைகிறது.

18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது.  அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு & காஷ்மீர்  உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை இந்தியா கூட்டணி சார்பில் ஆனி ராஜாவும், பாஜக சார்பில் மாநில தலைவர்  சுரேந்திரனும் களமிறங்கி உள்ளனர். இதனால் பலத்த போட்டி நிலவுகிறது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் எதிராக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் நேரடியாக களம் காண்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில், இரண்டு முறை எம்.பி.யும், மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினி  போட்டியிடுகிறார்.  ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமான அருண்கோவில் – உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள 13 மாநிலங்களின் 89 தொகுதிகளிலும் ஏற்கனவே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வாக்கு பதிவு எந்திரம் உள்பட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக  முனைப்பு காட்டி வந்த நிலையில், இன்று முற்பகல் முதல் வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி காமிரா உள்பட பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளன. 6மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

நேற்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்களிக்க இளம் தலைமுறையினர் உள்பட வாக்காளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்

அசாம் – 5 மக்களவை தொகுதிகள்

பீகார் – 5 மக்களவை தொகுதிகள்

சத்தீஸ்கர் – 3 மக்களவை தொகுதிகள்

ஜம்மு மற்றும் காஷ்மீர் – 1 மக்களவை தொகுதி (ஜம்மு)

கர்நாடகா – 14 மக்களவை தொகுதிகள்

கேரளா – 20 மக்களவை தொகுதிகள்

மத்தியப் பிரதேசம் – 7 மக்களவை தொகுதிகள்

மகாராஷ்டிரா – 8 மக்களவை தொகுதிகள்

மணிப்பூர் – 1 மக்களவை தொகுதி (வெளி மணிப்பூர்)

ராஜஸ்தான் – 13 மக்களவை தொகுதிகள்

திரிபுரா – 1 மக்களவை தொகுதி (கிழக்கு திரிபுரா)

உத்தரப் பிரதேசம் – 8 மக்களவை தொகுதிகள்

மேற்கு வங்காளம் – 3 மக்களவை தொகுதிகள்

இதற்காக அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.