உத்தர பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு – குறிப்பாக ஆளும் பா.ஜ.க.கட்சினருக்கு ‘நா காப்பது’ இயலாத காரியம்.
முதல் குடிமகன் முதல்வர் தொடங்கி அடிமட்டத்தொண்டன் வரைக்கும் சண்டையை மூட்டும் பேச்சும், சர்ச்சை கருத்தும்-ஒட்டிப்பிறந்தவை .
நமது பிரதமர் மோடியும் அந்த வலையில் சிக்கி இருப்பது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக்தளம்- பகுஜன் சமாஜ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
நேற்று அந்த மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி-எதிர்க்கட்சி கூட்டணியை ஆல்கஹாலுடன்- அதாவது – மதுவுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று கூட்டணி கட்சிகளின் முதல் இரு எழுத்துகளை சேர்த்தால் ‘சரப்’ என்ற வார்த்தை வரும். இந்தியில் சரப் என்றால் மது அல்லது சாராயம் என்று பொருள் படும்.
‘சரப்(மது பானம்)உடலுக்கு நல்லதல்ல. கேடு விளைவிக்க கூடியது.அதில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்’’ என்று எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சித்து பேசி கை தட்டலை மோடி அள்ளிச்செல்ல- காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
‘’மோடியின் பேச்சு அருவருப்பானது மட்டுமல்ல.. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்’’ என்று கண்டித்துள்ளார்-காங்கிரஸ்.செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா.
‘’இவ்வளவு கீழ்த்தரமாக பிரதமர் பேசி இருக்கக்கூடாது.அவர் 130 கோடி இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும்-மோடிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
–பாப்பாங்குளம் பாரதி