மும்பை
மக்களவை தேர்தல் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நாடு நடத்தும் போர் என மும்பை நவநிர்மாண் சமிதி தலைவர் ராஜ் தாக்கரே கூறி உள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சமிதி கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. இவரது கட்சி இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளது. அத்துடன் ராஜ் தாக்கரே இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு தொடன்ர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜ் தாக்கரே மும்பையில் தனது கட்சி தொண்டர்கள் கூட்டத்தில், “நமது எந்த ஒரு கேள்விக்கும் யாரும் பதில் சொல்வதில்லை. நாடு கேட்கும் எந்த கேள்விக்கும் ஆள்பவர்களிடம் பதில் இல்லை. அதனால் அவர்கள் சௌக்கிதார் எனக் கூறி வித்தை காட்டி வருகின்றனர்.
கடந்த 2014 முதல் நாடெங்கும் 14000 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். ஆனால் பிரதமருக்கு அவர்கள் குடும்பத்தை சந்திக்க நேரம் இல்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மோடி பல பொய்யான புகைப்படங்களை காட்டி குஜராத் முன்னேறி உள்ளதாக சொன்னார். அதை நம்பி நாமும் பாஜகவை அந்த தேர்தலில் ஆதரித்தோம். தற்போது மோடி மாறி விட்டார் என்பதை உணர்ந்த நாங்களும் ஆதரவை மாற்றி விட்டோம்.
பாகிஸ்தானுடன் போரிடப் போவதாக சொல்கிறார்களே, அதற்கு பணம் எங்கே உள்ளது? அரசு பணம் இல்லாமல் ரிசர்வ் வங்கியிடம் பிச்சை எடுக்கிறது. பிறகு எவ்விதம் பாகிஸ்தானுடன் போர் தொடுக்க திட்டமிட முடியும்? ரிசர்வ் வங்கியிடம் அரசு கேட்ட ரூ. 3 லட்சம் கோடியில் ரூ. 28 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு பிடிக்காததால் அவர் ராஜினாமா செய்தார்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டும் அல்ல. இது மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக நாடு நடத்தும் போர் ஆகும். இதில் வெற்றி பெற பாஜக வாக்காளர்களுக்கு நிச்சயம் லஞ்சம் அளிக்கும். அதை நீங்கள் மறுக்க வேண்டாம். ஏனெனில் அது கடந்த 5 வருடங்களாக உங்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணமாகும்” என தெரிவித்துள்ளார்.