திருவனந்தபுரம்: இரண்டாவது முறையாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடும்  ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

18வது மக்களவைக்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளத. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து,   ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்தில் 2வது கட்ட தேர்தலின்போது,   வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ள  நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வயநாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி காங்கிரஸ் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் ராகுல் இங்கு போட்டியிட்டு எம்.பி.யான நிலையில், தற்போது 2வது முறையாக மிண்டும் போட்டியிடுகிறார்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து,  இண்டியா கூட்டணி சார்பில், கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனி ராஜாவும்,  பாஜக வேட்பாளராக, கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனும் போட்டியிட உள்ளனர்.

வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!