டெல்லி: அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர், பேனர் வைப்பவர் பெயர் தொலைபேசி எண், மற்றும் தேர்தல் ஆணைய ஒப்புதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அரசியல் கட்சியினரிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 19ந்தேதி தொடங்க உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து,  விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள், துண்டு பிரசுரம் உள்பட பல்வேறு முறைகளில்,  விளம்பரம் செய்து வருகிறார்கள் . ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன.  சில பேனர்களில் தேவையற்ற வார்த்தைகளும் இடம்பெற்றன. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் கூறியது.

இதையடுத்து, தேர்தல் விளம்பரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,

விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது.  ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான்  தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்க முடியும்.  தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 127ஏ – இன் கீழ், உரிய பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் விபரங்கள் இல்லாமல், தேர்தல் துண்டு பிரசுரங்களோ, சுவரொட்டிகளோ அச்சிடப்படுவதற்கும், வெளியிடுவதற்கும் தடை உள்ளது.

பதிப்பகம், வெளியீட்டாளர் குறித்த தெளிவான விபரங்கள் இருந்தால், அது தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, தேர்தல் செலவினங்கள் மற்றும் வேட்பாளர் மற்றும் கட்சிகளின் ஒழுங்குமுறையை உறுதி செய்வதற்கு வசதியாக இருக்கும்.

எனவே, அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதில் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், விளம்பர போர்டுகளை குத்தகைக்கு எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் என அனைவருக்குமே முக்கிய பொறுப்பு உள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிகள், அரசு கருவூலத்தில் இருந்து செலவிட்டு, தேர்தல் விளம்பரங்களை தந்தால், அது தடை செய்யப்படும்.

உரிய அதிகாரிகளிடமிருந்து, முறையான அனுமதி மற்றும் ஒப்புதல் சான்றிதழும், அங்கீகாரமும் கிடைக்கப் பெற்ற பிறகே, தேர்தல் தொடர்பான அனைத்து அரசியல் விளம்பரங்களும் வெளியிடப்பட வேண்டும்.

பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை அந்த கட்சிதான் ஏற்க வேண்டும்.

ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால் பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.

அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.