இன்று காலை நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய எட்டு தொகுதிகளில் போட்டியிடும் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளாா். அதில், ‘இந்தியா’ கூட்டணி சாா்பாக திருநெல்வேலி பெல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கிறாா். அதே போல கோவை செட்டிபாளையம் எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள தோ்தல் பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினோடும் இணைந்து ராகுல் காந்தி பங்கேற்கிறாா். சமூகநீதி மண்ணாக இருக்கும் தமிழகத்தில் ராகுல்காந்தி பங்கேற்கும் பிரசார கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வந்து ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளாா்.
இந்த நிலையில், இன்று காலை நெல்லை வரும் ராகுல்காந்தி, அங்கு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து சென்னை வரும் ராகுல்காந்தி அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து நெல்லை வரும் அவர் நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். மேலும் ரோடு ஷோவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதி சாலை முழுவதும் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு பாளை. ஜான்ஸ் கல்லூரி ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி கோவை புறப்பட்டு செல்கிறார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமாரும், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வெற்றிக்காக தொகுதி பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவையில் முகாமிட்டு, தொழில்துறை நிர்வாகிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். மா.கம்யூ., தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளர் சுபேர்கான் ஆகியோர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இணைந்து வாக்கு சேகரித்து, உரை நிகழ்த்த உள்ளனர். இன்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு, கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, அருகே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பது இந்திய கூட்டணி கட்சியினரிடையே புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.