டெல்லி: நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பாஜக கூட்டணி எம்.பி.க்களும் கூச்சலிட்டதால், சபையில் அமைளி ஏற்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், தொடர்ந்து 5 நாள்களாக முடக்கப்பட்டு வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து விவாதிக்கலாம், அதே நேரத்தில் மேலும் பல மாநிலங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என பாஜக கோரி வருகிறது.
இதற்கிடையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் தாக்கல் செய்துள்ளது. இதனை அவைத் தலைவர் ஏற்றுக் கொண்ட நிலையில், விவாதத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்துக்கு இ கருப்பு உடை அணிந்து வந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இந்தியா கூட்டணி எம்பிக்கள், அவை தொடங்கியதும் மணிப்பூர் விவகாரத்தை மீண்டும் கிளப்பினர். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மாநிலங்களவையில் வெளியுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, பாஜக கூட்டணி கட்சியினர், மோடி, மோடி என்று முழக்கமிட்டனர். இரு தரப்பினர் கூச்சலிட்டத்தால் அவை அமளிதுமளிப்பட்டது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து மத்திய அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் அறிக்கைக்குப் பிறகு, ராஜ்யசபாவில் உள்ள அவைத் தலைவர் பியூஷ் கோயல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அணியும் கருப்பு ஆடைகள் குறித்து கருத்து தெரிவித்தார். இது போன்ற தீவிரமான விஷயத்திலும் அரசியல் நடப்பது துரதிர்ஷ்டவசமானது, இது இந்தியாவின் கவுரவப் பிரச்சினை, உலகின் முன் இந்தியாவின் உருவப் பிரச்னை… கருப்பு உடை அணிந்தவர்களால் முடியாது என்று நினைக்கிறேன். நாட்டின் அதிகரித்து வரும் சக்தியை புரிந்து கொள்ளுங்கள்….அவர்களின் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் கருப்பு. ஆனால் அவர்களின் வாழ்க்கையிலும் வெளிச்சம் இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
இதற்கிடையில், அவைத் தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கை முன் பதாகைகளுடன் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதால், பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதுபோல மாநிலங்களவையும் பிற்பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.