டெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் தங்களின் கோரிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் கோஷங்களை எழுப்பியதால், மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால்க் கூட்டத்தொடர் நேற்று (ஜுலை 21ந்தேதி) காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாளிலேயே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு அவை தொடங்கியவுடன் பாஜக மூத்த எம்பி ஜக்தம்பிகா பால், மக்களவைக்கு தலைமைத் தாங்கினார். அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு எழுந்து நின்றார். ஆனால் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவையில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையில் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இ ” நாடாளுமன்ற அவையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் எதிர்க்கட்சிகள் ஏதாவது சொல்ல விரும்பினால், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல், பிரியங்கா காந்தி எம்.பி.யும் , “விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறதென்றால், எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று 2வது நாள் அமர்வு வழக்கம்போல காலை 11மணிக்கு தொடங்கியது. முன்னதாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில், பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டவர்கள், அவையில், சிந்தூர், பஹல்காம், குஜராத் விமான விபத்து, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 12மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களை தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சமாதானப்படுத்த முயன்ற நிலையில், அதை ஏற்க மறுத்து தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் அவையை 12மணி வரை ஒத்தி வைத்தார். அதுபோல மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்சியும் அவையை மதியம் 12மணி வரை ஒத்தி வைத்தார்.