டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  இன்று மழைக்கால முதல்நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,  இறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும்  வகையில் மக்களவை, மாநிலங்களவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழலில். சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைக்கால கூட்டத்தொடர்  இன்று தொடங்கியது.  இந்த  மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தேசிய நிதித் தகவல் பதிவேடு, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, திவால் திருத்தச் சட்டம் என 31 மசோதாக்கள் நாடாளுமன்ற அமர்வில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டெல்லியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம், மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக எதிர்கட்சிகள் தரப்பில்  விவாதிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை 11மணி அளவில் வழக்கமான நடைமுறைகளுடன் இரு அவைகளும் தொடங்கின. இதையடுத்து, அவையில்,  இறந்த நாடாளுமன்ற உறுப்பினர் களின் பெயர்களை தெரிவித்து, அது தொடர்பாக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.   அதையடுத்து அனைத்து உறுப்பினர்களும் மறைந்த உறுப்பினர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து,  மக்களவை  மதியம் 2 மணி வரையிலும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதம் காலமான ஹர்த்வார் துபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஜ்யசபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.