டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால்,  மக்களவை 12மணி வரையிலும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள வன்முறையால் மணிப்பூர் மாநிலம் கடுரமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசிற்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடங்கிய 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  கடந்த 6 நாட்களாக இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்ட நிலையில், இன்று 7வது நாளாக எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கி உள்ளது.

மழைக்கால கூட்டத் தொடரின் 7வது நாளாக இன்று காலை 11மணி அளவில் இரு அவைகளும் மீண்டும் கூடிய நிலையில் மக்களவை மதியம் 12 மணி வரையிலும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

மணிப்பூர் விவகாரம் மற்றும், மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு மக்களவை சபாநாயகர் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,. மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்த எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில், 2023ஆம் ஆண்டு ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.  அதுபோல, ஜன விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, 2023 கூட்டுக் குழுவின் அறிக்கையின்படி, மக்களவையில் நேற்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.