சென்னை:
ரடங்கை மீறி சாலைகளில் மீண்டும் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் ஜூன் 7-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 25, 26-ம் தேதிகளில் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால், அதன் பிறகு பரவலாக பல சாலைகளிலும் வாகனப்போக்குவரத்து மெல்ல அதிகரித்தது.

இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். ‘தீவிர நடவடிக்கை எடுப்பதில் சமரசம் வேண்டாம். முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தனியாக அபராதம் விதியுங்கள்’ என்றும் காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல் வாகன சோதனை, அபராதம் விதிப்பது, வழக்கு பதிவு செய்வது, வாகனங்கள் பறிமுதல் என அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும். ஊரடங்கை மீறி உரிய அனுமதியின்றி வரும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த49 நாட்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 11.70 லட்சம் வழக்குகள், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 55,668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.