டெல்லி: ஊரடங்கின் போது, எந்த பகுதிகளில் என்ன நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று மத்திய அரசு ஒரு நீண்ட அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 18 ஆம் தேதி வரை  நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது: சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என ஜோன்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும். அதன்படி சிவப்பு மண்டலங்களின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது. மற்ற பகுதிகளில் இருக்க வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் மே 18ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.
ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை. மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும். சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை தொடரும்.
மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது. சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்.
சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம். சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி தரப்படுகிறது. அத்யாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது. சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை.
ஆரஞ்சு வண்ண பகுதிகளுக்கான அறிவிப்புகளும் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆரஞ்சு வண்ண மாவட்டங்களில் வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம். மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
பச்சை மண்டலங்களில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம். 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்.
நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும். பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இணைய வணிகத்தில் அனுமதி தரப்படுகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.